இறைத்தூதர் நபிகள் பெருமகனார் போதித்த ஈகை, கருணை, அன்பு, மனிதநேயம் உள்ளிட்ட பண்புகளை கடைபிடித்து, போற்றி வளர்க்கவேண்டும் - அ.இ.அ.தி.மு.க. சார்பில் சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து உரை

Jul 2 2015 6:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

இறைத்தூதர் நபிகள் பெருமகனார் போதித்த ஈகை, கருணை, அன்பு, மனிதநேயம், சினம் தவிர்ப்பு உள்ளிட்ட பண்புகளை தொடர்ந்து கடைபிடித்து, போற்றி வளர்க்கவேண்டும் என, அ.இ.அ.தி.மு.க. சார்பில் சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தமது உரையில் தெரிவித்துள்ளார்.

புனித ரமலான் மாதத்தில், இஸ்லாமியப் பெருமக்கள் நோன்பு கஞ்சி தயாரிக்க தேவையான அரிசியை பள்ளிவாசல்களுக்கு வழங்க, முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா, கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி ஆணையிட்டார். அதன்படி, தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு சுமார் 4,500 மெட்ரிக் டன் மொத்த அரிசி அனுமதி ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உன்னதத் திட்டம் இஸ்லாமியப் பெருமக்களிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

மேலும், உலமா ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தியது - மாதாந்திர ஓய்வூதியத் தொகையை அதிகரித்தது - வக்ஃபு வாரியத்தின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க மானியத் தொகையை 1 கோடி ரூபாயாக உயர்த்தியது - நிலுவையிலுள்ள ஓய்வூதியப் பலன்களை வழங்க ஒட்டு மொத்தமாக 3 கோடி ரூபாய் வழங்கியது - ஹஜ் குழுவிற்கு வழங்கும் அரசு மானியத்தை 30 லட்சம் ரூபாயாக உயர்த்தியது - முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் திரட்டப்பட்ட நன்கொடைக்கு ஈடாக அரசு வழங்கும் தொகையை இரண்டு மடங்காக உயர்த்தியது என இஸ்லாமியப் பெருமக்களுக்கு பல்வேறு மகத்தான நலத்திட்டங்களை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், இஸ்லாமியப் பெருமக்களின் புனிதத் திருநாளான ரமலானையொட்டி, சென்னை நந்தம்பாக்கம் மவுண்ட், பூந்தமல்லி சாலையில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் அ.இ.அ.தி.மு.க. சார்பில், இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி நடைபெற்ற சென்னை வர்த்தக மைய வளாகத்தின் வாயிலில், இஃப்தார் விருந்தில் பங்கேற்க வரும் அனைவரையும் வரவேற்கும் வகையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு பதாகை அமைக்கப்பட்டிருந்தது.

இஃப்தார் விருந்து நிகழ்ச்சி தொடங்கியதும், தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் திரு. அ. தமிழ்மகன் உசேன் வரவேற்புரையாற்றினார். அமைச்சர் திரு. S. அப்துல் ரஹீம் வாழ்த்துரை வழங்கினார். இதனைத்தொடர்ந்து, இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவின் உரையை கழகப் பொருளாளரும், நிதியமைச்சருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார்.

எனது அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் வழக்கம் போல் நேரில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும். எனினும், திடீரென்று ஏற்பட்ட உடல்நலக் குறைவின் காரணமாக இந்த விழாவிற்கு என்னால் நேரில் வர இயலவில்லை. என்னால் இந்த விழாவில் கலந்து கொள்ள இயலாவிடினும், எனது எண்ணங்கள் இந்த விழாவைச் சுற்றியே உள்ளன. எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் கழகப் பொருளாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களை, எனது உரையை இந்த விழாவில் படிக்குமாறு நான் பணித்துள்ளேன்.

இந்த இனிய விழா மேடையில் அமர்ந்திருக்கும் சன்னி பிரிவு தலைமை ஹாஜி ஜனாப் முப்தி டாக்டர் ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அவர்களே, ஷியா பிரிவு தலைமை ஹாஜி ஜனாப் ஹாஜி குலாம் முகமது மெஹடிகான் அவர்களே, அண்ணா சாலை தர்கா அறங்காவலர் ஹாஜி சையத் மொய்னுதீன் அவர்களே, ஜனாப் ஹாஜி ஆற்காடு இளவரசர் முகம்மது அலி அவர்களே, ஜனாபா ஹாஜிமா ஆற்காடு இளவரசி பேகம் சாஹிபா சயீதா அப்துல் அலி அவர்களே, வரவேற்புரை ஆற்றிய அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரும், தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவருமான அன்புச் சகோதரர் திரு. அ. தமிழ்மகன் உசேன் அவர்களே, வாழ்த்துரை வழங்கிய மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத் துறை அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. எஸ். அப்துல் ரஹீம் அவர்களே, நன்றியுரை நவிலவுள்ள கழக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும், கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளருமான திரு. அன்வர் ராஜா அவர்களே, கழக அவைத் தலைவர் திரு. இ. மதுசூதனன் அவர்களே, தலைமைக் கழக நிர்வாகிகளே, மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே, இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் செ.கு. தமிழரசன் அவர்களே, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு. ஆர். சரத்குமார் அவர்களே, அகில இந்திய தேசிய லீக் தலைவர் திரு. எஸ்.ஜே. இனாய்த்துல்லாஹ் அவர்களே, தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் திரு. எஸ். ஷேக் தாவூத் அவர்களே, மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பேராயர் டாக்டர் மா. பிரகாஷ் அவர்களே, கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, அரங்கத்தில் வீற்றிருக்கின்ற தோழமைக் கட்சித் தலைவர்களே, இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே, வணக்கத்திற்குரிய பெரியோர்களே, என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான என் உயிரினும் மேலான எனது அருமை கழக உடன்பிறப்புகளே, "எனது அன்பான அழைப்பினை ஏற்று, 'இஃப்தார் நோன்பு திறப்பு' நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவருக்கும் என் சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் எனது நன்றியினையும், அன்பு கலந்த வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரமலான் திருநாள் ஓர் ஈகைத் திருநாள். தினமும் ஐந்து முறை இறை வழிபாடு மேற்கொள்ளும் இஸ்லாமியப் பெருமக்கள், ரமலான் மாதத்தில் நோன்புடன் கூடிய இறை வழிபாட்டை மேற்கொள்கின்றனர். மனித வாழ்க்கையில் அகமும், புறமும் தூய்மையடைவதற்கான ஒரு பயிற்சி தான் நோன்பு. நோன்பிருத்தல் மூலம் இறைப் பற்று அதிகமாகிறது. ஈகைக் குணம் மேலோங்குகிறது.

"ஈகைத் தன்மையும், குன்றாத புகழும் தவிர வாழ்க்கைக்கு ஆக்கமும், ஊக்கமும் தரக்கூடியது ஏதுமில்லை" என ஈகையின் மகத்துவத்தை எடுத்துரைத்து இருக்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

இறைவனால் அனுப்பப்பட்ட இறைத் தூதர் நபிகள் பெருமகனார் அவர்கள் துன்பத்தை தனதாக்கிக் கொண்டு, இன்பத்தை மட்டுமே பிறருக்கு பகிர்ந்து கொடுத்து பரவசப்பட்டவர்கள். இதற்குக் காரணம் அவரது அன்பும், ஈகையும், கருணையும் தான்.

ஒரு பள்ளிவாசல். அங்கே நபிகள் நாயகம் அவர்கள் உட்கார்ந்திருந்தார். அப்போது, ஒரு முதியப் பெண்மணி நபிகள் பெருமகனாரை காண வந்தார். "அல்லாவின் திருத்தூதரே, இந்த ஏழைக் கிழவி கொண்டு வந்துள்ள திராட்சைக் குலையை ஏற்று அருள வேண்டும்" என்று கூறி நபிகள் வசம் அதனைத் தந்தார். அதனைப் பெற்றுக் கொண்ட நபிகள் பெருமகனார், ஒரு பழத்தை எடுத்து சுவைத்தார்கள். பிறகு மூதாட்டியுடனும், தோழர்களுடனும் உரையாடிக் கொண்டே ஒவ்வொரு பழமாக எடுத்துச் சாப்பிட்டார்கள். மூதாட்டிக்கு ஒரே மகிழ்ச்சி. பின்னர், எல்லையற்ற ஆனந்தத்துடன் அந்த மூதாட்டி அங்கிருந்து புறப்பட்டார். மூதாட்டி சென்றவுடன், நபிகள் பெருமகனாரின் தோழர்கள் அவரைப் பார்த்து, ""எல்லாவற்றையும் எல்லோருடனும் பங்கிட்டு உண்ணும் பழக்கம் உடைய தாங்கள், வழக்கத்திற்கு மாறாக எல்லா பழங்களையும் தாங்களே சாப்பிட்டது அதிர்ச்சியாக இருக்கிறது" என்று தெரிவித்தனர்.

நபிகள் பெருமகனார் சிரித்துக் கொண்டே, "அம்மா ரொம்பப் பிரியமாக அந்தப் பழங்களை என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார்கள். முதலில் ஒரு பழத்தை சுவைத்துப் பார்த்தேன். மிகவும் புளிப்பாக இருந்தது. வழக்கம் போல் உங்களுக்கு வழங்கினால் நீங்கள் முகத்தை சுளித்துக் கொண்டு பழம் புளிக்கிறது என்று கூறிவிட்டால் அந்த மூதாட்டி வேதனை அடைவார். மூதாட்டியின் அன்பான மனதை நோகடிக்கக் கூடாது என்பதற்காகத் தான், பழங்கள் அனைத்தையும் நானே சாப்பிட்டேன்" என்று கூறினார்.

அடுத்தவர் மனது புண்படக் கூடாது என்பதற்காக புளிப்பையும் இனிப்பாக ஏற்றுக் கொள்கிற பண்பாடு நபிகள் நாயகம் அவர்களிடத்தில் இருந்தது. யாருடைய மனதும் நோகக் கூடாது, யாரையும் குறைத்துப் பேசக் கூடாது என்பதிலே உறுதியாக இருந்தவர் நபிகள் பெருமகனார் அவர்கள்.

நபிகள் நாயகம் அவர்களின் வழியினைப் பின்பற்றும் இஸ்லாமியப் பெருமக்கள், அவரது போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்து, அவற்றை போற்றி வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நாடும், வீடும், சுற்றமும், உற்றமும் நலமுடன் வாழவும்; அமைதியும், ஆனந்தமும் எங்கும் பரவவும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க! என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.''

முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா வாழ்த்துக் கடிதம் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அ.இ.அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் திரு. அ. அன்வர் ராஜா எம்.பி., நன்றியுரையாற்றினார். தலைமை காஜி, ஜனாப் முப்தி டாக்டர் ஹாஜி சலாவுதீன் முகமது அயூப், இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து, இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில், ஷியா பிரிவு தலைமை காஜி ஜனாப் ஹாஜி குலாம் முகமது மெஹடிகான், சென்னை அண்ணா சாலை தர்கா அறங்காவலர் ஹாஜி சையத் மொய்னுதீன், ஜனாப் ஹாஜி ஆற்காடு இளவரசர் முகம்மது அலி, ஜனாபா ஹாஜிமா ஆற்காடு இளவரசி பேகம் சாஹிபா சயீதா அப்துல் அலி, அ.இ.அ.தி.மு.க. அவைத் தலைவர் திரு. இ. மதுசூதனன், இந்தியக் குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் செ.கு. தமிழரசன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் திரு. ஆர். சரத்குமார், அகில இந்திய தேசிய லீக் தலைவர் திரு. எஸ்.ஜே. இனாய்த்துல்லாஹ், தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் திரு. எஸ். ஷேக் தாவூத், மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பேராயர் டாக்டர் மா. பிரகாஷ் மற்றும் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இஸ்லாமியர்கள் நன்றி

இறைத்தூதர் நபிகள் பெருமகனார் போதித்த ஈகை, கருணை, அன்பு, மனிதநேயம், சினம் தவிர்ப்பு உள்ளிட்ட பண்புகளை தொடர்ந்து கடைபிடித்து, போற்றி வளர்க்கவேண்டும் என, அ.இ.அ.தி.மு.க. சார்பில் சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தமது உரையில் தெரிவித்திருந்தார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இஸ்லாமியபெருமக்களுக்காக தொடர்ந்து நிறைவேற்றி வரும் பல்வேறு மகத்தான் திட்டங்களை பாராட்டியுள்ள இஸ்லாமிய பெருமக்கள் முதலமைச்சருக்குத் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00