இந்திய நாடு முழுவதும் அமைதி, வளம், வளர்ச்சி ஏற்படவும், தமிழ்நாட்டின் உரிமைகள் பாதுகாக்கப்படவும், தமிழகத்திற்கு உரிய நிதி ஆதாரங்கள் மத்திய அரசிடம் இருந்து கிடைத்திடவும், புதிய மத்திய அரசில் அ.இ.அ.தி.மு.க. வலுவான முறையில் பங்கேற்கும் வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என, வாக்காளப் பெருமக்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமக்கென்று தனிப்பட்ட வாழ்வு ஏதும் இல்லை என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மக்களின் வளர்ச்சிதான் தமது மகிழ்ச்சி என்றும், மக்களின் உயர்வுதான் தமக்கு நிம்மதி என்றும் தெரிவித்துள்ளார்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா, வாக்காளப் பெருமக்களுக்கு இன்று விடுத்துள்ள வேண்டுகோளில், நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலும் நடைபெற உள்ளன என குறிப்பிட்டுள்ளார். இந்தத் தேர்தல்களையொட்டி கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி முதல் 37 பொதுக்கூட்டங்களிலும், சென்னை பெருநகரில் 17 இடங்களிலும், ஆக மொத்தம் 54 இடங்களில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு, இந்த தேசத்தின் எதிர்காலம் குறித்த தம்முடைய கனவுகளையும், கவலைகளையும், திட்டங்களையும் பற்றி உங்களிடையே எடுத்துக் கூற வாய்ப்பு கிடைத்ததில் தமக்கு மிகுந்த மகிழ்ச்சி -
தாம் செல்லும் இடமெல்லாம் வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் வரலாறு கண்டிராத வகையில் பல லட்சக்கணக்கில் திரண்டிருந்து நல்லாதரவு வழங்கினீர்கள் - உங்களுடைய உற்சாகமான பங்கேற்பு காரணமாக தம்முடைய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் எல்லோரும் கண்டு வியப்படையும் வகையில் வெற்றிகரமாக அமைந்தன - நீங்கள் காட்டிய அன்பு தம்மை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது - உங்கள் அனைவருக்கும் முதற்கண் தமது நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்களை, திராவிட இயக்கத்தின் பெயரைச் சொல்லியும், பேரறிஞர் அண்ணாவின் பெயரைச் சொல்லியும் வஞ்சித்து, அரசியலை தன் குடும்ப வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்ட திரு. கருணாநிதியின் சுயநல போக்கினைக் கண்டு வெகுண்டெழுந்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார் - தம் மீது நம்பிக்கை வைத்து அன்பு காட்டிய மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நல்லாட்சி நடத்தினார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். - அவருடைய நல்லாசியுடனும், அவருடைய வழியிலும் அரசியல் பயணத்தைத் தொடங்கிய தாம், தம்முடைய வாழ்வை உங்களுக்காகவே முழுமையாக அர்ப்பணித்து வாழ்கிறேன் - தமக்கென்று தனிப்பட்ட வாழ்வு எதுவும் இல்லை - உங்கள் வளர்ச்சி தான் தமது மகிழ்ச்சி - உங்களுடைய உயர்வு தான் தமக்கு நிம்மதி - எனவே தான், தம்முடைய ஆட்சிக் காலம் என்பது ஏழை, எளிய மக்களுக்காகவும், சமூக நீதி காப்பதற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்புக்கும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உயர்வுக்கும் தொண்டு செய்வதாக எப்பொழுதும் அமைகிறது - தம்முடைய ஆட்சியில் விலையில்லா அரிசி; மாதந்தோறும் தலா ஆயிரம் ரூபாய் முதியோர் ஓய்வூதியம்; கிராமப்புற வறுமையை ஒழிக்க எண்ணற்ற பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள்; பெண்கள் அனைத்து நிலைகளிலும் சுய நம்பிக்கையோடு முன்னேறிச் செல்ல எண்ணற்ற சிறப்புத் திட்டங்கள் போன்றவற்றை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தமக்கு பெரிதும் மகிழ்ச்சி அளிப்பது, வருங்கால தலைமுறையினருக்கு தரமான கல்வி தந்திட தாம் மேற்கொண்ட பல்வேறு திட்டங்களாகும் - தமிழக மாணவ, மாணவிகள் தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை தரமான கல்வி பெற இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செய்யப்படாத வகையில் பல்வேறு உதவிகளும், வசதிகளும் தமது ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
லட்சக்கணக்கான மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் விலையில்லா மடிக் கணினி வழங்கி வருவதன் மூலம் அறிவியல், தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் உலகிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது - தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களைக் கண்டு அதை பின்பற்ற ஏனைய இந்திய மாநிலங்களும், சில வெளிநாடுகளும் முயற்சிப்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் - மக்கள் நலன் காக்கும் இவை போன்ற இன்னும் பல்வேறு முன்னோடித் திட்டங்களை இந்த நாட்டிற்கு அளித்து, எல்லோரும் எல்லாமும் பெறுகின்ற உன்னத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆவல் தம் உள்ளத்தில் இருக்கிறது - அதை செயல்படுத்திட உங்கள் அன்பும், ஆதரவும் தமக்கு எந்நாளும் தேவை - தமிழ் நாட்டில் பலமுறை ஆட்சி நடத்திய திமுக, தமிழ் மக்கள் கொடுத்த வாய்ப்பின் காரணமாக கிட்டத்தட்ட 17 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் தொடர்ந்து அங்கம் வகித்தது - ஆனால், திரு. கருணாநிதி தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு நன்மை செய்வதற்கு பதிலாக, தமிழர்களுக்கு எண்ணற்ற துரோகங்களையும், தீமைகளையும் தான் செய்தார் - திரு. கருணாநிதியின் சுயநல, வஞ்சக போக்கிற்கு எடுத்துக்காட்டுகள் தான், உலக அரங்கில் தமிழர்களை தலைகுனியச் செய்த 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நாட்டிற்கு இழப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலும்; இலங்கையில் அப்பாவி தமிழ்ப் பொதுமக்கள் லட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டதற்கு அவர் பங்கேற்ற கூட்டணி அரசு வழங்கிய ஆயுதமும், ஆதரவும் - எத்தனை வாய்ப்பு கிடைத்தாலும், அத்தனை வாய்ப்பையும் திரு. கருணாநிதியும், திமுக-வினரும் தங்கள் சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்துவார்கள் என்பது வரலாறு - காங்கிரஸ் கட்சியின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசலில் ஆரம்பித்து வெங்காயம் வரை அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்தன - இந்திய ரூபாயின் மதிப்பு மளமளவென சரிந்தது - பணவீக்கம் உயர்ந்தது - திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நிலக்கரி சுரங்க ஊழல், ஹெலிகாப்டர் பேரத்தில் ஊழல், காமன்வெல்த் விளையாட்டில் ஊழல் என பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம் ஊழலால் விரயமானது - இது போன்ற கொடுமைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திட வாக்காளப் பெருமக்களாகிய உங்களுக்கு இந்தத் தேர்தல் மூலம் ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள், இந்திய நாட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்தும்; தமிழ்நாட்டின் சிறப்புத் தேவைகளை கருத்தில் கொண்டும்; அனைத்து மக்களின் நல்வாழ்வுக்காகவும் பாடுபடுகின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்தியில் ஆட்சி அமைக்கின்ற வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தாலும், பாரதீய ஜனதா கட்சிக்கு கிடைத்தாலும், அவை, தமிழகத்தின் உரிமைகளையும், தமிழ் மக்களின் தேவைகளையும் பற்றி சிறிதும் கவலைப்பட்டதில்லை - அதற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் தமிழகத்தின் வாழ்வாதாரமான காவேரி நதிநீர்ப் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் தங்களுடைய வெளி மாநில வாக்கு வங்கிக்காகவே மவுனம் காத்த துரோகச் செயல் - இந்தக் கட்சிகளின் நண்பனாக பல ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொண்டிருந்த திமுக தன்னுடைய சுயநலனுக்காக தமிழர்களின் உரிமைகளை பலியிட்டது - திமுக தலைவர் திரு. கருணாநிதியின் எண்ணத்தில் மேலோங்கி இருப்பது தமிழர்களின் நலன் அல்ல - தன் குடும்பத்தின் நலன் மட்டுமே - இதற்கு ஒரு தீர்வு காண இந்தத் தேர்தலை வாக்காளர்களாகிய நீங்கள் பயன்படுத்த வேண்டும் - இந்திய நாடு முழுவதும் `அமைதி', `வளம்', `வளர்ச்சி' ஏற்படவும், தமிழ் நாட்டின் உரிமைகள் பாதுகாக்கப்படவும்; தமிழ் நாட்டிற்கு உரிய நிதி ஆதாரங்கள் மத்திய அரசிடமிருந்து கிடைத்திடவும்; புதிய மத்திய அரசில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலுவான முறையில் பங்கேற்பதன் அவசியத்தை தமிழகம் மற்றும் புதுச்சேரி வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள் - எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தந்த வெற்றிச் சின்னமாம் `இரட்டை இலை' சின்னத்தில் வாக்களித்து, அவர்கள் அனைவரையும் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தமதருமை வாக்காளப் பெருமக்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறிப்பாக, இந்தத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கப் போகும் இளைய தலைமுறை வாக்காளர்கள், தங்கள் வாக்குகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அ.இ.அ.தி.மு.க.வை வலுப்பெறச் செய்யும் வகையில் `இரட்டை இலை' சின்னத்திற்கு வாக்களிக்குமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வாக்காளப் பெருமக்களே! தமிழ்நாடு தலை நிமிரும் வகையிலும், இந்திய நாட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்தும், நீங்கள் அனைவரும் வாக்குப் பதிவு நாளான நாளை மறுநாளன்று, காலையிலேயே வாக்குச் சாவடிக்கு சென்று உங்கள் வாக்குகளை பதிவு செய்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.