அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக திகழ்கிறது தமிழகம் - நாட்டின் சிறந்த நிர்வாகி குஜராத்தின் மோடி அல்ல, தமிழ்நாட்டின் இந்த லேடிதான் : தென்சென்னை மக்களவைத் தொகுதி பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பெருமிதம்

Apr 22 2014 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடாளுமன்றத் தேர்தலில், "40-ம் நமதே" என்ற வெற்றி முழக்கத்தோடும், மத்தியில் ஊழல் காங்கிரஸ் ஆட்சியை அகற்றியே தீருவது என்ற உறுதியோடும், சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, நேற்று, தென்சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், கழக வேட்பாளர் திரு. ஜெ. ஜெயவர்தனை ஆதரித்து, லட்சக்கணக்கில் அலைகடலென திரண்டிருந்த மக்களிடையே எழுச்சிப் பேருரையாற்றி, வாக்கு சேகரித்தார். முதலமைச்சர் சென்ற இடமெல்லாம் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் லட்சக்கணக்கில் திரண்டு நின்று எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

"அமைதி, வளம், வளர்ச்சி" என்ற தாரக மந்திரத்தோடும், "வளமான வல்லரசு, வலிமையான நல்லரசு" என்ற உன்னத லட்சியத்தோடும், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கடந்த மாதம் 3-ம் தேதியில் இருந்து முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, செல்லும் இடங்களில் எல்லாம் லட்சக்கணக்கான கழகத் தொண்டர்களும், பொதுமக்களும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், மிகுந்த ஆர்வத்துடன் அலைகடலென திரண்டு, தங்களின் பேராதரவை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

சென்னையில் 3 நாள் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கடந்த 19 ஆம் தேதி ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி மற்றும் மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களிலும், தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். நேற்று முன்தினம், வடசென்னை மக்களவைத் தொகுதியில் அலைகடலென திரண்டிருந்த பொதுமக்களிடையே முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, எழுச்சிப் பேருரையாற்றி, கழக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.

இதன் தொடர்ச்சியாக, நேற்று தென்சென்னை மக்களவைத் தொகுதியின் கழக வேட்பாளர் திரு. ஜெ. ஜெயவர்தனை ஆதரித்து, சுமார் 37 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, லட்சக்கணக்கில் திரண்டிருந்த பொதுமக்களிடையே முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, எழுச்சிப் பேருரையாற்றி வாக்கு சேகரித்தார்.

தென்சென்னை தேர்தல் பிரச்சாரத்திற்காக, சென்னை போயஸ் கார்டனிலிருந்து, நேற்று மாலை புறப்பட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, டாக்டர். சிவசாமி சாலை, திரு.வி.க. நெடுஞ்சாலை, லஸ் கார்னர், மந்தைவெளி, சத்யா ஸ்டுடியோ, திரு.வி.க. பாலம், L.B. ரோடு, அடையாறு பேருந்து பணிமனை, திருவான்மியூர், OMR சாலை வழியாக பெருங்குடியில் உள்ள கந்தன்சாவடி காளியம்மன் கோயில் பஸ் ஸ்டாப் பகுதிக்கு வருகை தந்தார்.

வழிநெடுகிலும், 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு, சாலையின் இருமருங்கிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் கழகக் கொடியின் வண்ணங்களைக் கொண்ட பலூன்களையும், கழகக் கொடிகளையும், இரட்டை இலை சின்னங்களையும் கரங்களில் ஏந்தியபடி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி வந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, மயிலாப்பூர் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோவில், மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை ஸ்ரீ கபாலீஸ்வரர் திருக்கோவில், மந்தைவெளி அருள்மிகு ஆதி சிவசக்தி விநாயகர் திருக்கோவில், திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி திருக்கோவில், பெருங்குடி ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில், பெருங்குடி கற்பக விநாயகர் திருக்கோவில் உள்ளிட்ட கோவில்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பிலும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. K.P. கந்தன், பரங்கிமலை கழகச் செயலாளர் திரு. நாராயணன், சோழிங்கநல்லூர் தொகுதி கழகச் செயலாளர் திரு. சுந்தரம் ஆகியோர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு மலர்க்கொத்துக்கள் வழங்கி வரவேற்றனர்.

பெருங்குடியில் உள்ள கந்தன்சாவடி காளியம்மன் கோயில் பஸ் ஸ்டாப் பகுதியில் அலைகடலென லட்சக்கணக்கில் திரண்டிருந்த பொதுமக்களும், கழகத் தொண்டர்களும் முதலமைச்சரை பார்த்ததும் மிகுந்த உற்சாகத்துடன் கரவொலி எழுப்பி வரவேற்றனர். வெற்றிச்சின்னமாம் இரட்டை இலை சின்னத்தைக் குறிக்கும் வகையில், முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, இரு விரல்களை உயர்த்திக் காண்பித்து, அனைவருக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்களிடையே எழுச்சிப் பேரூரையாற்றி, தென்சென்னை மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் டாக்டர் ஜெ. ஜெயவர்தனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து, எம்.ஜி.ஆர். மெயின்ரோடு, தரமணி ரோடு, விஜயநகர் பேருந்து நிலையம், வேளச்சேரி ரோடு, பனகல் மாளிகை, ஜீனிஸ் ரோடு, ஐந்து விளக்கு, மசூதி தெரு வழியாக வருகை தந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு சாலையின் இருமருங்கிலும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும், கழகத் தொண்டர்களும் கரவொலி எழுப்பியபடி எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

சைதாப்பேட்டை சின்னகடும்பாடி அம்மன் திருக்கோவில், சைதாப்பேட்டை திருக்காரணீஸ்வரர் திருக்கோவில், தியாகராய நகர் அகத்தியர் திருக்கோவில் உள்ளிட்ட கோவில்கள் சார்பில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

கந்தன்சாவடி, காளியம்மன்கோவில் பகுதியில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரம் சென்ற முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சின்ன கடும்பாடி அம்மன் கோயில் அருகே, ஜோன்ஸ் ரோடு ஜெயராமன் தெரு சந்திப்பில் கழக வேட்பாளர் டாக்டர். ஜெ.ஜெயவர்தனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு எழுச்சிப் பேருரையாற்றினார். அரசியல் சுயநலத்திற்காக எந்தக் கட்சியுடனும் கூட்டு சேரத் தயாராக இருக்கும் கொள்கையற்ற தி.மு.க.வை இந்தத் தேர்தலில் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என, அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடம் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அங்கிருந்து மேற்கு ஜோன்ஸ் ரோடு, கங்கையம்மன் கோயில் தெரு, காசி தியேட்டர், ஜவஹர்லால் நேரு ரோடு, பாரதிதாசன் காலனி வழியாக, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதிக்கு வருகை தந்தார். மூன்றரை கிலோமீட்டர் தூரம் வேனில் சென்ற முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த பொதுமக்களும், கழகத் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாரதிதாசன் நகர் ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன் திருக்கோவில் மற்றும் கே.கே. நகர் அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோவில் சார்பில் முதலமைச்சருக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தென்சென்னை தொகுதியின் கழக வேட்பாளர் டாக்டர் ஜெ. ஜெயவர்தனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து எழுச்சிப் பேருரையாற்றிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சென்னை மாநகர மக்கள் நலனுக்காக, அ.இ.அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ள பல்வேறு சாதனைத் திட்டங்களை பட்டியலிட்டார்.

இதனைத்தொடர்ந்து, அண்ணா மெயின்ரோடு, உதயம் தியேட்டர், அசோக் பில்லர், கோவிந்தன் சாலை, அரங்கநாதன் சுரங்கபாலம், நியூ போக் ரோடு, முத்துரங்கன் சாலை வழியே தியாகராய நகர் பேருந்து நிலையப் பகுதிக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வருகை தந்தார்.

முதலமைச்சருக்கு தியாகராய நகர் சிவா விஷ்ணு திருக்கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கலைராஜன் மற்றும் தியாகராய நகர்ப்பகுதி கழகச் செயலாளர் திரு. ஏழுமலை ஆகியோர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பூங்கொத்துகள் வழங்கி வரவேற்றனர்.

இதனைத்தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும், ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளரையும் ஆதரித்து அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா எழுச்சி பேருரையாற்றினார். அனைத்து வேட்பாளர்களையும், முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்களிடையே ஒட்டுமொத்தமாக அறிமுகம் செய்துவைத்தார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் எழுச்சிப்பேருரையைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான கழகத் தொண்டர்களும், பொதுமக்களும், மிகுந்த உற்சாகத்துடன் கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நாலாபுறமும் திரண்டிருந்த பொதுமக்களைப் பார்த்து, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்தைக் குறிக்கும் வகையில், தமது இரு விரல்களை உயர்த்திக் காண்பித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பர்கிட் ரோடு, சவுத் போக் ரோடு, தேவர் சிலை, சேமியர்ஸ் ரோடு, T.T.K. சாலை வழியாக போயஸ் கார்டன் திரும்பினார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, நேற்று ஒரே நாளில் மொத்தம் 37 கிலோ மீட்டர் தூரம் வேனில் செய்து, கழக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

முதலமைச்சர் ஜெயலலிதா பேருரை

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் நேற்று, தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, கடந்த ஒன்றரை மாதகால, தமது சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில், மாற்றுக்கருத்து கொண்டவர்களை கீழ்த்தரமாக விமர்சிக்கவில்லை என்றும், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் சீர்கேடுகளால் ஏற்பட்ட தமது உள்ளக் குமுறல்களையே வெளிப்படுத்தியதாகவும் உருக்கமாகத் தெரிவித்தார்.

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில், 40 மக்களவைத் தொகுதிகளின் கழக வேட்பாளர்கள் மற்றும் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை ஒட்டுமொத்தமாக அறிமுகம் செய்துவைத்தும், கழகத்தின் அனைத்து வேட்பாளர்களை ஆதரித்தும், லட்சக்கணக்கான மக்களிடையே, எழுச்சியுரையாற்றிய முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா, தொழில் வளர்ச்சி, அந்நிய முதலீடு, உணவு-தானிய உற்பத்தி, பொது விநியோகத் திட்டம், மகளிர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களிலும், குஜராத்தை விட தமிழகம் முன்னணியில் இருப்பதாக புள்ளி விவர ஆதாரங்களுடன் விளக்கமாக எடுத்துரைத்தார். எனவே, "நாட்டின் மிகச்சிறந்த நிர்வாகி, குஜராத்தின் மோடி அல்ல - தமிழ்நாட்டின் இந்த லேடிதான்" என முதலமைச்சர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சென்னை திட்டங்கள்

தென்சென்னை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் டாக்டர் ஜெ. ஜெயவர்தனை ஆதரித்து, லட்சக்கணக்கான மக்களிடையே நேற்று எழுச்சிப் பேருரையாற்றிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சென்னை மாநகர மக்களின் குடிநீர்த் தேவைக்காக தமது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ள புதிய வீராணம் திட்டம் உள்ளிட்ட குடிநீர்த்திட்டங்களை பட்டியலிட்டார். மேலும், சென்னை மாநகர வளர்ச்சி மற்றும் சுகாதார வசதிகளுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலப் பணிகள் குறித்தும் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா விளக்கமாக எடுத்துரைத்தார்.

கழகத்தில் இணைந்தனர்

முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, நேற்று தென்சென்னை மக்களவைத் தொகுதியில், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. டாக்டர் J. ஜெயவர்தனுக்கு ஆதரவாக, தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது,காங்கிரஸ், தே.மு.தி.க., பகுஜன் சமாஜ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரத்து 858 பேர், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார்.

தென்சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா முன்னிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச் செயலாளர் திரு. B. ராஜப்பா தலைமையில் 60 நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரம் பேர் - திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் திரு. K. புருஷோத்தமன், செயலாளர் திரு. P.V. ரவிக்குமார், தே.மு.தி.க. தொழிற்சங்க தென்சென்னை மாவட்ட செயலாளர் திரு. ர. மணி தலைமையில் 300 பேர் - தே.மு.தி.க. தொழிற்சங்க தென்சென்னை மாவட்ட பொருளாளர் திரு. P.T.C., S. நித்தியானந்தம், மயிலாப்பூர் தொகுதி 176-வது வட்ட மாமன்ற வேட்பாளர்தே.மு.தி.க.-வைச் சேர்ந்த திருமதி. லலிதா சரவணன் தலைமையில் சுயஉதவிக் குழு மகளிர் பிரதிநிதிகள் 103 பேர் - விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை அமைப்பாளர் திரு. பொன் ரவிச்சந்திரன் தலைமையில் 351 பேர் - மாவட்ட தொண்டர் அணிச் செயலாளர் திரு. எஸ். வேங்கையன் மற்றும் பறையர் பேரவையைச் சேர்ந்த சென்னை மாவட்ட அமைப்புச் செயலாளர் திரு. அர்ஜுன் பாஸ்கர் தலைமையில் 100 பேர் ஆக மொத்தம் ஆயிரத்து 858 பேர், தங்களை அ.இ.அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கி, வாழ்த்தி வரவேற்றார். தாயுள்ளத்தோடு தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டதற்காக, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவுக்கு, அவர்கள் அனைவரும் தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00