புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., முதலமைச்சர் ஜெயலலிதா இணைந்து நடித்து, திரையுலக வரலாற்றில் சாதனை படைத்த, "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம் நவீன தொழில் நுட்பத்தில் மறு வெளியீடு செய்யப்பட்டு வெள்ளி விழா - முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து

Sep 2 2014 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., முதலமைச்சர் ஜெயலலிதா இணைந்து நடித்து, திரையுலக வரலாற்றில் சாதனை படைத்த, "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம் நவீன தொழில் நுட்பத்துடன் மறு வெளியீடு செய்யப்பட்டு வெள்ளி விழா கொண்டாட்டத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிய படங்கள் சாதிக்க முடியாததை ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சாதித்துக் காட்டியிருப்பதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலக வரலாற்றில் சாதனை படைத்த "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் எண்ணியியல் வடிவில் தயாரிக்கப்பட்டு, மறுவெளியீட்டில் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி கண்டு வெள்ளிவிழா கொண்டாடப்படுவதையொட்டி, திவ்யா பிலிம்ஸ் திரு. ஜி. சொக்கலிங்கம் அவர்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

அதில், திரையுலக வரலாற்றில் முதன்முறையாக, மறு வெளியீட்டில் மாபெரும் சாதனைப் படைத்துக் கொண்டிருக்கும் காலத்தால் அழிக்க முடியாத காவியமான "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தம்மை நேரில் வந்து அழைத்தமைக்கு தமது நெஞ்சார்ந்த நன்றியினை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரை வானிலும், அரசியல் வானிலும், எவராலும் வெல்ல முடியாத அளவுக்கு வரலாற்றுச் சாதனைப் படைத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் இணைந்து தாம் நடித்த முதல் தமிழ் வெற்றித் திரைப்படமான "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் எண்ணியியல் வடிவில் தயாரிக்கப்பட்டு, மீண்டும் தமிழகத்தின் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு, வெள்ளி விழாவினை கொண்டாட இருக்கிறது என்ற செய்தி தமக்கு பெருமகிழ்ச்சியினை அளிக்கிறது.

1965-ம் ஆண்டே 100 நாட்கள் ஓடி சாதனை படைத்த "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம், கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்து வெள்ளிவிழா காணும் அளவுக்கு வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பது, காலத்தைக் கடந்து அனைத்து தரப்பு மக்களையும் கவரும் திரைப்படமாக விளங்குகிறது - லட்சக்கணக்கான மக்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் திரைப்படமாக திகழ்கிறது என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறது. புதிய படங்கள் சாதிக்க முடியாததை "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம் சாதித்துக் காட்டி இருக்கிறது. தற்போதைய தலைமுறையினரும் இந்தத் திரைப்படத்தை மிகுந்த ஆர்வத்துடன் கண்டுகளிக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது, தம் மனம் பூரிப்பு அடைவதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஒரு திரைப்படம் திரையரங்குகளில் ஒரு வாரம் ஓடினாலே அதனை வெற்றிப் படம் என்று சொல்கின்ற இந்தக் காலத்தில், "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம் 1965-ம் ஆண்டில் 100 நாட்களைக் கடந்து ஓடியதோடு, இன்றைக்கு மறுவெளியீட்டிலும் 175 நாட்கள் ஓடும் அளவுக்கு அதனை மக்கள் கண்டு களிக்கிறார்கள் என்றால், அந்தப் படத்தின் கதை, தரம், அந்தப் படத்தில் பங்கு பெற்றவர்களின் திறமை ஆகியவை எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க முடிகிறது.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகும், "சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை", போல் வாடாமல் இருக்கின்ற வாடாமலர் "ஆயிரத்தில் ஒருவன்" என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்திற்கு இசையமைத்த மெல்லிசை மன்னர் திரு. எம்.எஸ். விஸ்வநாதன், திரைப்பட பின்னணிப் பாடகி திருமதி. பி. சுசீலா, வசனகர்த்தா திரு. ஆர்.கே. சண்முகம், நடிகை திருமதி. எல். விஜயலட்சுமி, நடிகை திருமதி மாதவி ஆகியோர் கவுரவிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்து, தாம் மிக்க மகிழ்ச்சியடைவதாகக் தெரிவித்துள்ள முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, இந்தத் திரைப்படத்திற்கு அவர்கள் செய்த திருப்திகரமான பணியை, நிறைவை, தாம் இந்தத் தருணத்தில் நினைவு கூர்ந்து அவர்களுக்கு தமது நல்வாழ்த்துகளையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

"ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தை தயாரித்து, இயக்கிய இயக்குநர், மறைந்த திரு. பி.ஆர். பந்தலு, தமது தந்தையைப் போன்றவர் - தம் மீது மிகுந்த பாசமும், மதிப்பும் வைத்திருந்தார் - தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் என்றென்றும் தங்கள் மனங்களில் நிலைத்து நிற்கக்கூடிய திரைக்காவியங்களை படைத்த ஒரு மிகச்சிறந்த படைப்பாளி, தயாரிப்பாளரும், இயக்குநருமான திரு. பந்துலு என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

தயாரிப்பாளரும், இயக்குநருமான திரு. பந்துலுவின் படைப்பிற்கு இன்றளவும் உயிரோட்டம் கொடுக்கும் வகையில், "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தை எண்ணியியல் வடிவில் மறுவெளியீடு செய்து, அந்தத் திரைப்படம் மாபெரும் சாதனை படைக்க காரணமாக இருந்த, திரு. பந்துலுவின் புதல்வி திருமதி. பி.ஆர். விஜயலெட்சுமி மற்றும் புதல்வன் திரு. பி.ஆர். ரவிசங்கர் ஆகியோருக்கு, தமது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அவர்களது பணி தொடர, தமது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

தம்மைப் பொறுத்தவரையில், "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம், தமக்கு ஒரு மறக்க முடியாத வாழ்நாள் அனுபவத்தைப் பெற்றுத் தந்தது - ஏனென்றால், இந்தத் திரைப்படம்தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன், தாம் நடித்த முதல் தமிழ் திரைப்படம், வெற்றித் திரைப்படம் - இந்தத் திரைப்படத்தின் மூலம்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை சந்திக்கும் வாய்ப்பும், அவருடன் பேசுகின்ற வாய்ப்பும் தமக்கு கிடைத்தது - தாம் அரசியலுக்கு வருவதற்கும், அடித்தளமாக அமைந்த படம் "ஆயிரத்தில் ஒருவன்" என்று சொன்னால் அது மிகையாகாது - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன், அதிகமான, அதாவது 28 திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த பெருமையும், தம்மையே சாரும் என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

மறுவெளியீட்டில் மாபெரும் சாதனை படைத்த "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தின் வெள்ளிவிழா குறித்து, தமக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தால் இந்த வெள்ளி விழா நிகழ்ச்சியில் தாமே நேரில் வந்து பங்கேற்று இருக்க முடியும் என்றும், முன்கூட்டியே ஒப்புக்கொள்ளப்பட்ட பணிகள் காரணமாக, தம்மால் நேரில் வந்து கலந்துகொள்ள இயலவில்லை என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

திரையுலக வரலாற்றில், முதல்முறையாக மறுவெளியீட்டில் மகத்தான சாதனைபுரிந்த "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தின் வெள்ளி விழா, மிகசிறந்த முறையில் சீரோடும், சிறப்போடும் அமைய தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதோடு, தாங்கள் இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துவதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.



ஆயிரத்தில் ஒருவன் வெள்ளி விழா

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் நல்லாசியுடன், நவீன தொழில் நுட்பத்துடன் மறு வெளியீடு செய்யப்பட்டு மாபெரும் வெற்றிபெற்ற, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்-முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா இணைந்து நடித்த "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தின் வெள்ளி விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வெற்றி முழக்கமிட்டு வெள்ளி விழாவைக் கொண்டாடினர்.

திரையுலக வரலாற்றில் முதன்முறையாக மறுவெளியீட்டில் மாபெரும் சாதனை படைத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் - முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா இணைந்து நடித்த "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழா நடைபெறும் காமராஜர் அரங்கின் முன்பு திரண்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், ரசிகர்களும், அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும், பேண்ட் வாத்தியங்கள் உள்ளிட்ட இசைக்கருவிகள் முழங்க ஆடல், பாடலுடன் உற்சாகமாக நடனமாடி வெள்ளி விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் அவர்கள் ஆரவார முழக்கமிட்டனர்.

இந்த விழாவில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நல்லாசியுடன் "ஆயிரத்தில் ஒருவன்" பிரம்மாண்டமான திரைக்காவியத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுடன் பங்குபெற்ற மெல்லிசை மன்னர் திரு. எம்.எஸ். விஸ்வநாதன், பின்னணிப் பாடகி திருமதி. பி. சுசீலா, வசனகர்த்தா திரு. ஆர்.கே. சண்முகம், மெய்காப்பாளர் திரு. கே.பி. ராமகிருஷ்ணன், நடிகைகள் திருமதி. எல். விஜயலட்சுமி, திருமதி. மாதவி, பத்மினி பிக்சர்ஸ் திரு. பி.எஸ். ரவிசங்கர் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

மேலும், "ஆயிரத்தில் ஒருவன்" திரைக்காவியத்தில் பங்கு பெற்ற அன்றைய மற்றும் இன்றைய தொழில்நுட்ப வல்லுநர்களும் கௌரவிக்கப்பட்டனர். சட்டமன்ற உறுப்பினர் திரு. சரத்குமார், நடிகர்கள் திரு. சத்யராஜ், திரு. ஆர். பாண்டியராஜன், திரு. விவேக், திரு. செந்தில், திரு. ராஜ்கிரண், இயக்குனர்கள் திரு. P. வாசு உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். திரையுலக முன்னணி நட்சத்திரங்கள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ரசிகர்கள், அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த விழாவில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00