தமிழக மீனவர்கள் வாழ்வாதார விவகாரத்தில், தமிழக அரசு முன்வைத்துள்ள அம்சங்களை இந்திய - இலங்கை அமைச்சர்கள் பேச்சுவார்த்தையின்போது கவனத்தில் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

Jul 22 2014 5:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய - இலங்கை மீனவர்களிடையே டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இருநாட்டு மீனவர்களும் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிப்பது என்றும், இருதரப்பினருக்குரிய மீன்பிடிக்கும் நாட்களை வரையறுப்பது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தின் கருத்துகளை அமைச்சகங்களுக்கு இடையிலான குழு, கவனத்தில் எடுத்துக்கொண்டு, உணர்வுபூர்வமான இந்த பிரச்னைக்கு நீண்டகால தீர்வு ஏற்படும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்தும், சிறைபிடிக்கப்படுவது குறித்தும் திரு. நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பின் பலமுறை கடிதம் எழுதியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஜுன் மாதம் 3-ம் தேதி பிரதமரிடம் தாம் அளித்த மனுவில், இந்தப் பிரச்னைக்கு நீண்டகால அடிப்படையில் தீர்வுகாணும் வகையில் தாம் சில யோசனைகளை அளித்துள்ளதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் மத்திய அரசு ஆக்கப்பூர்வமாக செயலாற்றி வருவதற்கு பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, மத்திய அரசு அதிகாரிகள், உடனடியாக செயல்பட்டு தமிழக மீனவர்களை இலங்கை சிறையிலிருந்து விடுவிப்பதில் மிக சரியாக நடந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய - இலங்கை மீனவர் பிரச்னை தொடர்பாக, கடந்த ஜுன் மாதம் 17-ம் தேதி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை அமைச்சரோடு பேச்சுவார்த்தை நடத்தியதை தாம் அறிந்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மீனவர்கள் பிரச்னை, மத்திய அரசின் உயர்மட்ட அளவில் கொண்டு செல்லப்பட்டதை தாம் வரவேற்பதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகள் தமக்கு கவலை அளிப்பதாக உள்ளதென குறிப்பிட்டுள்ளார். இந்த முடிவுகள், மத்திய அரசின் வேளாண் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறையின் ஆணையர் மூலம், மாநில அரசுக்கு கடந்த 15-ம் தேதி கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதலாவதாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் எல்லை மேலாண்மை பிரிவு, கலங்கரை விளக்கத்தின் தலைமை இயக்குநர் உதவியுடன், சர்வதேச கடல் எல்லையை வரையறுப்பதற்கான மிதவைகளை நிறுவுவது குறித்து இந்தக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது - 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் இந்தியா - இலங்கை இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் மூலமாக, சட்டவிரோதமாகவும், அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் இந்தியாவின் இறையாண்மையை மீட்கும்படி தாம் பிரதமருக்கு அளித்த மனுவிலும், அதுதொடர்பாக எழுதிய தொடர் கடிதங்களிலும் கேட்டுக் கொண்டுள்ளதை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார். கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாம் வழக்கு தொடர்ந்துள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சர்வதேச கடல் எல்லைக் கோட்டினை ஒரு தீர்வாக தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை - இந்தப் பிரச்னை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, சர்வதேச கடல் எல்லைகளில் மிதவைகளை நிறுவுவது பொருத்தமற்றதும், நடைமுறைக்கு ஒவ்வாததும் ஆகும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக பெருங்கடல் பகுதிக்கு செல்லும் மீன்பிடி கப்பல்களை வாங்குவதற்காக 50 சதவீத மானிய உதவிகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, மீனவர்களின் மாற்று வாழ்வாதார வழிமுறைக்காக 1,520 கோடி ரூபாய் மற்றும் வருடாந்திர பராமரிப்புக்காக ஆண்டுதோறும் 10 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்பதை கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி பிரதமரிடம் அளித்திருந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதை நினைவு கூர்ந்துள்ளார்.

* பாக் நீரிணைப் பகுதியில் பெரு வலை வீசி மீன்பிடிக்கும் படகுகளின் அழுத்தத்தை குறைக்கும் வகையில், புதிய ஆழ்கடல் நீள் கப்பல்களை மூன்றாண்டுகளில் வாங்குவதற்காக 975 கோடி ரூபாய் வழங்க வேண்டும்;

* ஆழ்கடலில் மீன் பிடிக்க பயன்படும் சிறு கப்பல்களை அனுப்புவதற்கும், அவற்றுக்கு உதவிடவும் நடுக்கடலில் பெரிய தாய்க் கப்பல் உள்ளிட்ட நடுக்கடல் மீன்பிடி தொழில்முறை பூங்கா அமைப்பதற்கு ஏறக்குறைய தேவைப்படும் செலவினத் தொகையான 80 கோடி ரூபாய்க்கான உதவி வழங்கிட வேண்டும் - இதன்மூலம் ஆழ்கடலில் பிடிக்கப்படும் மீன்களின் விலைமதிப்பு அதிகரிப்பதோடு, பாக் நீரிணையில் ஆழமற்ற பகுதியில் மீன்பிடிக்க வேண்டிய நிர்பந்தமும் குறையும்;

* திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணூர் மீன்பிடி துறைமுகம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் மூக்கையூர், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகங்களில் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக 420 கோடி ரூபாய் மானியம் கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது;

* மீன்பிடி துறைமுகங்களிலும், முகத்துவாரங்களிலும் சேரும் மணலை அகற்றி ஆழப்படுத்தவும், வருடாந்திர மானியமாக 10 கோடி ரூபாய் வழங்குதல்;

* வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்களின் பிரிவில் படகு உரிமையாளர்களை சேர்ப்பதற்கான நடைமுறைக்கு சாத்தியமற்ற தகுதி வரம்பை நிர்ணயித்தல் மற்றும் இயந்திர படகுகளுக்கான அதிவேக டீசலுக்குரிய மத்திய கலால் தீர்வையை திரும்ப அளிக்கும் திட்டத்தின்கீழ், மாதத்திற்கு 500 லிட்டர் என்ற உச்சவரம்பையும் நீக்குவது குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும்;

* மோட்டார் பொருத்தப்பட்ட பாரம்பரிய படகுகள் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் வருடாந்திர ஒதுக்கீட்டை 3 கோடி ரூபாயிலிருந்து 9 கோடி ரூபாயாக ஒதுக்குவதன் மூலம் 5 ஆண்டுகளில் எஞ்சியுள்ள 32,000 பாரம்பரிய படகுகளை மோட்டார் பொருத்தியவையாக மாற்றி அமைக்க முடியும் - ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ள விரிவான சலுகை திட்டத்துடன், Gill வலைகளாக மேம்படுத்திட 100 கோடி ரூபாய் மானிய உதவி வழங்கினால், பாக் நீரிணைப் பகுதியில் நீடித்த மீன்பிடி நடைமுறை அறிமுகமாக வழிவகுக்கும் - பாக் நீரிணையும், மன்னார் வளைகுடாவும் சிறப்பு வாழ்க்கைச் சூழல் மண்டலங்களாகும் - மன்னார் வளைகுடா இந்தியாவின் முதன்மையான பாதுகாக்கப்பட்ட உயிர்ச்சூழல் மண்டலமாகும் - பாக் நீரிணைப் பகுதி ஆழமற்ற பகுதியாகும் - எனவே இவ்விரு பகுதிகளும் கடல்வாழ் உயிரின வளர்ப்புக்கு ஏற்றதல்ல - மேலும், மீன்வளர்ப்பு நடவடிக்கைகளால் நல்ல தண்ணீர், உப்பு நீராக மாறும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், கடலோர மாவட்டங்களில் மீன் வளர்ப்பு கட்டுப்படுத்தப்படுவதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இந்திய - இலங்கை மீனவர்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், Gill வலைகளை பயன்படுத்தி இருநாட்டு மீனவர்களும் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிப்பது என்றும், இருதரப்பினருக்குரிய மீன்பிடிக்கும் நாட்களை வரையறுப்பது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இந்திய-இலங்கை கூட்டு பணிக்குழுக் கூட்டத்தில் இந்த அணுகுமுறை தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை தீவிரமாக பின்பற்றவேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் கருத்துக்களை அமைச்சகங்களுக்கு இடையிலான குழு கவனத்தில் எடுத்துக்கொண்டு அதற்கேற்ப உணர்வுபூர்வமான இந்த பிரச்னைக்கு நீண்டகால தீர்வு ஏற்படும் வகையில், மேல் நடவடிக்கை மேற்கொள்ளும் என தாம் நம்புவதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00