தமிழகம் முழுவதும் ஸ்டாலின் பங்கேற்கும் ஊராட்சி சபை கூட்டத்திற்கு திமுக ஏற்பாடு செய்யும் விதம் - ஆட்கள் அழைத்து வரப்படும் விதம் - அரங்கேறும் காட்சிகளை வெளிச்சம்போட்டு காட்டும் தொகுப்பு
Feb 12 2019 11:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் முழுவதும் ஸ்டாலின் பங்கேற்கும் ஊராட்சி சபை கூட்டத்திற்கு திமுக ஏற்பாடு செய்யும் விதத்தையும், அதற்கு ஆட்கள் அழைத்து வரப்படும் விதத்தையும் அங்கு அரங்கேறும் காட்சிகளையும் வெளிச்சம்போட்டு காட்டும் தொகுப்பு இது.
கிராமசபை கூட்டம் என்ற பெயரை ஏற்கனவே கமல்ஹாசன் கையிலெடுத்து நடத்தி முடித்து விட்டதால், ஊராட்சி சபை கூட்டம் என்று பெயர் வைத்து தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து வருகிறது திமுக. இந்த கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றை முடிந்த அளவிற்கு தீர்த்து வைப்போம் என்று களமிறங்கியுள்ளனர் திமுக நிர்வாகிகள். திமுக சார்பில் இப்படித்தான் கூறப்படுகிறது. ஆனால் ஊராட்சி சபை கூட்டங்களை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தி திமுக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது என்பதே உண்மை. ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, தயாநிதி ஒரு புறமும், திமுக நிர்வாகிகள் ஒருபுறமும் களமிறங்கி கிராம மக்களுடன் உரையாடி வருகின்றன. கூட்டத்தில் சமயம் கிடைக்கும் போதெல்லாம் எங்களை ஆட்சியில் அமர்த்துங்கள், உங்களுக்கு செய்து தருகிறோம் என்று பிரச்சாரத்தை கையில் எடுப்பது பலரையும் முகம் சுளிக்க வைக்கிறது.
ஸ்டாலின் பங்கேற்கும் கிராம சபை கூட்டங்களில் நடக்கும் சம்பவங்கள் கூடுதல் சுவை நிறைந்தவையாக உள்ளது. அந்த கூட்டங்களுக்கு ஆட்களை வரவழைப்பது, கூட்டத்திற்கு ஸ்டாலின் வரும் பொழுது எப்படி வணக்கம் கூற வேண்டும், எப்படி கைதட்ட வேண்டும், எப்படி எழுதிக் கொடுத்த கேள்வியை கேட்க வேண்டும் என நாடகத்திற்கு ஒத்திகை நடப்பது போன்று ஒரு முன்னோட்டம் நடைபெறுகிறது.
ஸ்டாலின் வந்த பிறகு நடைபெறும் காட்சிகள் சொல்லவே வேண்டாம். யாரும் தனது பக்கத்தில் வரவேண்டாம் என உத்தரவிடுகிறார். தீடீர் என கோபப்பட்டு சிலரை வெளியேறச்சொல்லுகிறார். மனு அளிக்க வருபவர்களிடம் அப்புறம் கொடுங்கள் என்று அதட்டுகிறார், அப்படியே மனுவை வாங்கினாலும் அதனை படித்து கூட பார்ப்பதில்லை. பொதுமக்கள் அளிக்கும் கேள்விகளுக்கு விருப்பம் இருந்தால் அல்லது தெரிந்தால் மட்டும் பதில் அளிக்கிறார். இல்லை என்றால் அவருக்கு பதில் அளிப்பதில்லை.
கூட்டத்தின் போது கொதித்தெழ்ந்த சிலர் இவ்வளவு நாளாக எங்கே சென்றீர்கள், தேர்தல் நெருங்கும் நேரத்தில் வருவது எங்கள் பிரச்சினையை தீர்க்கவா அல்லது உங்கள் பிரச்சினையை தீர்க்கவா என்று காட்டமாக கேள்வி கேட்கின்றனர். இதற்கு பதில் சொல்ல முடியாமல் ஸ்டாலின், உதயநிதி என பலரும் திணறும் காட்சிகள் சமூகவலைதளங்களில் ட்ரண்டாகி வருகிறது.
ஒவ்வோரு கூட்டத்திற்கும் வரவழைக்கப்படும் பொதுமக்களுக்கு கூட்டம் முடிந்தவுடன் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. அப்போது அந்த இடம் ஒரு குட்டி போர்க்களமாக மாறிவிடுகிறது. ஒருசில மூதாட்டிகள் திமுகவினர் தரும் அந்த சொற்ப பணம் கூட கிடைக்காமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
பொதுக்கூட்டங்களுக்கு பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வருவதெல்லாம் போய் தற்பொழுது ஊராட்சி சபை கூட்டங்களுக்கு பணம் கொடுத்து ஆட்களை வரவழைத்து என்ற புதிய ட்ரன்டை உருவாக்கி வருகிறது திமுக. ஊராட்சி சபை கூட்டங்கள் மூலமாக திமுக போட்டுள்ள கணக்கு என்ன என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் மக்கள் மனதில் என்ன கணக்கு வைத்துள்ளார்கள் என்பது யாருக்கும் தெரியாது. கிராம சபை கூட்டங்களில் நடிப்பது, ஊராட்சி சபை கூட்டங்களில் தலைவனாக பங்கேற்பது என்று எல்லா கணக்கையும் தாண்டி பிரச்சினைகள் வரும் போதேல்லாம் மக்களை நேரில் சந்திக்கும் ஒருவனை தலைவனாக்க வேண்டும் என்பது கூட மக்கள் கணக்காக இருக்கலாம். தேர்தல் வரட்டும்.