மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் உடல், சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது : மேகாலயாவிலிருந்து டெல்லி கொண்டு வரப்பட்ட கலாமின் உடலுக்கு, ஏராளமானோர் அஞ்சலி

Jul 28 2015 10:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் உடல், கவுஹாத்தியிலிருந்து விமானப்படை விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டது. பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முப்படைத் தளபதிகள் அவரது உடலை பெற்றுக் கொண்டனர். டெல்லியில் உள்ள அப்துல்கலாமின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. நாளை அப்துல்கலாமின் உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் A.P.J.அப்துல்கலாம், மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக டாக்டர் அப்துல்கலாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்தது.

டாக்டர் அப்துல் கலாமின் உடல் ஷில்லாங்கில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அஸ்ஸாம் தலைநகர் கவுஹாத்திக்கு இன்று கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முழு ராணுவ அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

அஸ்ஸாம் முதலமைச்சர் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து, அப்துல்கலாமின் உடல் விமானப்படை விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டது. இதனைத்தொடர்ந்து டெல்லி பாலம் விமான நிலையத்தில் டாக்டர் அப்துல் கலாமின் உடலுக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து முப்படைகளின் தளபதிகள் அப்துல் கலாமின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து குடியரசுத்தலைவர் திரு. பிரணாப்முகர்ஜி, குடியரசுத் துணைத்தலைவர் டாக்டர் ஹமீத் அன்சாரி, பிரதமர் திரு. நரேந்திரமோடி ஆகியோர் மலரவளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. மனோகர் பாரிக்கர், முப்படை தளபதிகள் ஆகியோர் டாக்டர் அப்துல் கலாமின் உடலை பெற்றுக் கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து டெல்லி ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள அப்துல் கலாமின் இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு மேல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டாக்டர் அப்துல்கலாமின் மறைவுக்கு, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது உடலை சொந்த ஊரான ராமேஸ்வரம் கொண்டு சென்று நல்லடக்கம் செய்வது என்றும் இக்கூட்டத்தில் முடிவெக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் டாக்டர் அப்துல்கலாமின் உருவப்படத்திற்கு தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் அஞ்சலி

பாரத் ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் மறைவால் தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் கடைகள் அடைக்கப்பட்டு, அனைத்து தரப்பினரும் அப்துல்கலாமுக்கு கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்கி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் டாக்டர் அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரம் அவரது மறைவால் அதிர்ச்சி அடைந்துள்ளது. ராமேஸ்வரதில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அப்துல்கலாமின் மூத்த சகோதரர் திரு முத்துமீரான் மரைக்காயர் மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்டோர் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மறைந்த டாக்டர் அப்துல்கலாம் பயின்ற ராமநாதபுரம், சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டது. மாணவர்கள் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், டாக்டர் அப்துல் கலாமை நினைவுகூரும் வகையில், புகைப்படக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அப்துல்கலாமின் மறைவுக்கு திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டாக்டர் அப்துல்கலாம் மறைந்தாலும் அவருடைய எழுத்துக்களும், பேச்சுக்களும் இந்திய திருநாட்டின் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கும் என நடிகர் விவேக் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் டாக்டர் அப்துல்கலாமின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான டாக்டர் அப்துல்கலாமின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் கடற்கரை சாலையில் மவுன ஊர்வலம் சென்றனர். தொடர்ந்து பல்கலைக்கழக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த அப்துல்கலாமின் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்தூவியும் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

டாக்டர் அப்துல் கலாம் உயர்கல்வி பயின்ற திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மவுன ஊர்வலம் நடத்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் டாக்டர் அப்துல்கலாமுக்கு, இயற்பியல் பேராசிரியராக இருந்த திரு. சின்னதுரை, அப்துல் கலாம் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

டாக்டர் அப்துல்கலாம் மறைவுக்கு திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் தேசிய ஹேண்ட்பால் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல், கும்பகோணம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மவுன அஞ்சலிகளும், அமைதி ஊர்வலங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்ற இரங்கல்

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல்கலாமின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மக்களவை கூடியதும், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல்கலாமின் மறைவையொட்டி அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். மௌன அஞ்சலிக்கு பிறகு, அப்துல்கலாமுக்கு மரியாதை செலுத்தும் வகையில், மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், மாநிலங்களவையிலும் டாக்டர். அப்துல்கலாமின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தலைவர்கள் புகழாரம்

பாரத ரத்னா டாக்டர் A.P.J. அப்துல் கலாம் மறைவுக்கு, குடியரசு தலைவர், பிரதமர், தமிழக ஆளுநர் மற்றும் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டு தூதர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் டெல்லியில் இன்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

குடியரசு தலைவர் திரு. பிராணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திரு. அப்துல்கலாம் தனது வாழ்நாள் முழுவதும் மக்களின் குடியரசு தலைவராக திகழ்ந்தவர் எனவும், அவரின் மறைவுக்குப் பின்னரும் மக்கள் மனதில் அதே நிலையில் நீடித்திருப்பவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், அப்துல்கலாமின் மறைவு இந்தியாவிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும், இந்தியாவை அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு சென்றவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். இந்த தேசத்தின் வழிகாட்டியை இழந்துவிட்டதாகவும், அறிவியல், தொழில்நுட்பம் மட்டுமின்றி விண்வெளி துறைக்கும் மிகப்பெரிய பங்காற்றிய விஞ்ஞானி என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தனது இரங்கல் செய்தியில், முன்னாள் குடியரசு தலைவரின் திடீர் மறைவு ஆழ்ந்த வருத்தம் அளிப்பதாகவும், மாசற்ற பண்பு, சோர்வில்லாத ஆன்மா, நுட்பமான பொது அறிவு, உறுதியான முடிவு ஆகிய நற்பண்புகளைக் கொண்டவர் டாக்டர் அப்துல்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் டாக்டர் கே.ரோசய்யா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், டாக்டர் அப்துல்கலாம், மக்களின் குடியரசுத்தலைவர் - இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களது மூளைகளில் தேடல் மற்றும் கற்பனை வளத்தை ஏற்றி வைத்தவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

இதேபோல், டெல்லி, பீகார், மேற்குவங்காளம் உள்ளிட்ட அனைத்து மாநில முதலமைச்சர்களும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், டாக்டர் அப்துல்கலாமின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00