ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், விசாரணையை துரிதப்படுத்த நடவடிக்கை : ஆ.ராஜா, கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்கள், வரும் 5-ம் தேதி முதல் பதிவு செய்யப்படும் என சி.பி.ஐ. நீதிமன்றம் திட்டவட்ட அறிவிப்பு

Apr 23 2014 3:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராஜா மற்றும் கருணாநிதி குடும்பத்தினர் மீது, இவ்வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. நீதிமன்றமும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் நடவடிக்கையை மேலும் துரிதப்படுத்தியுள்ளன. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் வாக்குமூலங்கள், வரும் 5-ம் தேதி முதல் பதிவு செய்யப்படும் என சி.பி.ஐ. நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், ஊழல் பணத்தில் இருந்து கலைஞர் டி.வி.க்கு 214 கோடி ரூபாய் வழங்கப்பட்டது தொடர்பான குற்றப்பத்திரிகையை அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் விரைவில் தாக்கல் செய்யவுள்ளது.

தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராஜா, மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை முறைகேடாக தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததில், சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது. இதுதொடர்பாக, ஆ.ராஜா, கருணாநிதி மகள் கனிமொழி உள்ளிட்டோர் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது அவர்கள் ஜாமீனில் உள்ளனர்.

மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராஜா இருந்தபோது, மத்திய அமைச்சரவைக் குழுவை கலந்தாலோசிக்காமல், பிரதமர் அலுவலகம், மத்திய நிதியமைச்சகம், சட்ட அமைச்சகம் ஆகியவற்றின் அறிவுரையைப் பொருட்படுத்தாமல், உரிமங்களை ஏலத்தில் விடாமல், பொய்த் தகவல்களை அளித்த பல நிறுவனங்களுக்கு ஆ.ராஜா, தன்னிச்சையாக 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ஒதுக்கீடுசெய்ததாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒதுக்கீடு பெற்ற சில நிறுவனங்கள் இத்துறையில் முன் அனுபவம் கொண்டவை அல்ல என்றும், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திற்கு கூடுதல் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், பார்தி, வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட 9 நிறுவனங்களுக்கு ஒப்பந்த அளவைக் காட்டிலும் கூடுதலாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் தொலைத் தொடர்புத்துறை வழக்கமாக கடைபிடிக்கும் நடைமுறைகள், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கடைபிடிக்கப்படவில்லை என்றும் மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டின் மூலம் நாட்டிற்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் பேரிழப்பை ஏற்படுத்திய தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா, கருணாநிதியின் மகள் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி உள்ளிட்ட 17 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. கடந்த 2011-ம் ஆண்டு அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கு விசாரணை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 4-ம் தேதி ஆ.ராஜா, கனிமொழி உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் காலஅவகாசம் கோரியதால், நேற்று முன்தினம் பதிவு செய்வதாக இருந்தது. ஆனால், ஆ.ராஜா தரப்பு வழக்கறிஞர் மேலும் அவகாசம் கோரினார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.O.P. Saini, விசாரணையை தாமதப்படுத்தும் வகையில் இதுபோன்ற காரணங்கள் கூறப்படுவதை ஏற்க முடியாது எனக் குறிப்பிட்டார். வரும் 5-ம் தேதி முதல், ஆ.ராஜா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனிடையே, ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் இருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு 214 கோடி ரூபாய் வழங்கப்பட்டது தொடர்பாக, கருணாநிதியின் மகள் கனிமொழி, மனைவி தயாளு, கலைஞர் தொலைக்காட்சியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி, ஆகியோர் மீது மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளது. கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின்கீழ், கடந்த 2010-ம் ஆண்டு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், இக்குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யலாம் என கூறப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதில் கூடுதல் சலுகை பெற்ற ஸ்வான் டெலிகாம், இதற்கு பிரதிபலனாக 214 கோடி ரூபாயை கலைஞர் தொலைக்காட்சிக்கு வழங்கியதாகவும், இந்த தொலைக்காட்சியில் தயாளு மற்றும் கனிமொழிக்கு மொத்தம் 80 சதவீத பங்குகளும், சரத்குமார் ரெட்டிக்கு 20 சதவீதப் பங்குகளும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00